#6 - ஜனநாயக கடமை ஆற்ற | ஒரு நினைவுக்குறிப்பு

ஏப்ரல் 18, 2024. அன்று மாலை பெங்களூருவில் நான் வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்து விரைவாக கிளம்பி முப்பத்தி ஏழு நிமிடங்களில் மோஹித் என்ற "ராப்பிடோ" கார(Rapido) அண்ணா உதவியால், சாந்தி நகர் பேருந்து நிலையத்தில் இறங்கினேன். அப்போது சரியாக ஐந்து ஐம்பத்தைந்து மணி ஆனது. இந்த பயணத்திற்கு 101 ரூபாய் மொய் பணம் கட்டினேன். 


அன்று காலை தான் SETC யில்,பெங்களூருவில் இருந்து மதுரைக்கு பேருந்து முன்பதிவு செய்தேன், குளிர்சாதன படுக்கை வசதிகொண்ட பேருந்திற்க்கு 1055 ரூபாய். நான் இதுவரை பேருந்தில் இவ்வளவு அதிக கட்டணம் செலுத்துவது இதுவே முதல்முறை.  சென்னையில் இருந்த போது, எவ்வளவு கூட்டம் என்றாலும் இரயிலிலோ, பேருந்திலோ நின்றபடியோ, தொங்கியபடியோ வருவேன். அது எனக்கு அழுப்பையும், அலைச்சலையும் ஏற்படுத்தினாலும், பல கோடி நடுத்தர வர்க்க, விளிம்பு நிலை மக்களை சந்திக்கவும், அவர்களது வாழ்கையை அவர்களைபோலவே வாழ கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளில் இதுவும் ஒன்று, என எண்ணிக்கொல்வேன். ஆனால் என்னவோ தெரியவில்லை, இன்று நான் முன்பதிவு செய்து விடலாம், தேவை இல்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று தோன்றியது, ஏனென்றால் பேருந்து கிடைக்கவில்லை என்றால் நான் என் ஜனநாயக கடமையை ஆற்றமுடியமல் போய் விடுமோ என்ற அச்சம். அது மட்டும் இல்லாமல், என்னை பொறுத்த வரை ஒரு இந்தியன் ஆக எனது இரு தலையாய கடமைகளில் ஒன்று ஓட்டு போடுவது, இன்னொன்று வருமான வரி கட்டுவது. ஒன்றை செய்து வருகிறேன். வருமானத்திர்க்கு வரி கட்டும் அளவிற்கு இன்னும் என் வருமானம் வளர வில்லை, வரி கட்டும் அளவிற்கு நான் சம்பாதிக்க வேண்டும், ஏன் இன்னும் சொல்ல போனால் இந்தியாவிலேயே அதிக வருமான வரி கட்டும் நபர் என்ற பெருமையோடு வாழ வேண்டும் என்றும்,எனக்கு பெங்களூருவின் தகவல் தொழில்நுட்ப கார்பொரேட் வாழ்கையில் வாழும் மக்களின் வாழ்க்கையை பார்த்தால் தோன்றுகிறது. இது மட்டும் நடந்தால் நான் தான் உண்மையில் "Proud to be இந்தியன்" என்றும மாரு தட்டி சொல்ல தகுதி உடையவன் என்றும் தோன்றுகிறது. இல்லை இல்லை நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும், ஒடுக்கபடுபவரக்களுக்காகவும் போராடி பல மக்கள் உயிர் தியாகங்கள் செய்திருக்கின்றனர், அவர்களுக்கு முன் நான் சிறு தூசி தான். என்னால் என்ன முடியுமோ அதை சரியாக செய்கின்றேன் என்ற ஒரு சிறிய மனமகிழ்ச்சி, அவ்வளவு தான்.


சரி மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வருவோம். ஆறு ஐம்பதுக்கு வரவேண்டிய வண்டி, ஏழே கால் மணிக்கு தான் வந்தது, ஏறி அமர்ந்துவிட்டேன். உள்ளே ஒரே வெக்கை. வெந்துதள்ளியது. குளிர்சாதன பேருந்தில் ஏசியை ஆன் செய்யாமல் இருந்தனர். வேர்த்து ஊத்தியது, பின்பு பேருந்து ஏழு முப்பதிர்க்கு கிளம்பியது, அப்போது ஏசியை போட்டனர். வியர்வையில் நனைந்த சட்டை அனைத்தும் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக குளிர ஆரம்பித்தது. வண்டியோ ஊர்ந்து ஊர்ந்து சென்றது ஏனென்றால், சரியான டிராபிக்.பெங்களூருவை தாண்டவே, ஒன்பதரை மணி ஆகிட்ரு. அந்த ஊர்ந்து செல்லுதலில், AC காற்றும் அவ்வளவு ஒத்துக்காதவன் என்பதனாலும், காது அடைத்து ஒரு வித motion sickness போன்று வாந்தி வருவதை போலவேதோன்றிற்று. நல்ல வேளை நான் இரவு எதும் சாப்பிடவில்லை. ஒரு நல்ல நாள்(Good Day) பிஸ்கட் பாக்கெட் வாங்கிவைதிருந்தேன், அதை மட்டுமே சாப்பிட்டேன். 


பெங்களூருவை கடக்க ஏற்பட்ட அந்த இரண்டுமணி நேரங்களில், என்மனதில் பலவாறு சிந்தனைகள் வந்த வண்ணம் இருந்தன, இப்போது இன்னும் சொந்த ஊருக்கு ஓட்டு போடுவதற்காக முன்பதிவு செய்யாமல் எவ்வளவு லட்ச மக்கள் சென்னையில் இருந்தும், பெங்களூருவிலிருந்தும், இன்னும் சில ஊர்களிலிருந்தும் கஷ்டபட்டு செல்கிறார்கள். நாம் சொகுசாக படுத்துகொண்டு செல்கிரோமே, இந்த மக்கள் தேர்வு செய்யும் கட்சிக்காரர்கள், இவர்களுக்கும் எல்லாருக்கும் பயனுள்ள பல நல்ல முன்னெடுப்புகளை செய்து அனைவரின் வாழ்க்கையையும் மேம்படுத்த வேண்டும் என்றே ஏக்கமாக தோன்றியது. ஆனால் இது நடக்காத காரியம், அது ஆமையை விட, நதையை விட மிக மிக மெதுவாக நடைபெறும் மாற்றம் தான் என்று மனம் ஏற்க மறுக்கிறது..


அப்படியே அசதியில் நான் தூங்கிவிட்டேன், காலை நாலு மணிக்கு மதுரை வந்தடையும் என்று பஸ் எரியதுமே அலாரம் வைத்திருந்தேன், அதுவும் அடித்தது. அப்போது Map இல் பார்த்தேன், கரூர் அருகே தான் சென்றுகொண்டிருந்தது.. கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் தூங்கி 6 மணிக்கு முளித்தேன். பின் 7 மணி அளவில் ஆரப்பாளையம் வந்தது. அங்கிருந்து திருமங்கலம் பஸ் ஏறினேன், அதில் ஓர் அம்மாவும் மகளும் நடத்துனரிடம் பேசிக்கொண்டு வந்தது என் காதில் விழுந்தது. அந்த பெண்ணிற்கு இது தான் முதல் முறை ஓட்டாம், அவர்களது தொகுதி ராஜபாளையத்தில் உள்ளதாம், அங்கே சென்று தங்கள் ஜனநாயக கடமை ஆட்ற, தாய் அழைத்து செல்கிறார். "போய்ட்டு வர 500 ரூபாய் ஆகும், இருந்தாலும் பரவாயில்லை, பிள்ளை மொத வாடி ஒட்டு போடுறா அதான் கூட்டிட்டு போறேன்" என்றார். பின்பு வர வழியில் உள்ள பள்ளி முன்னாள் போலீசாரும், துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்களும் காவல் இருக்க, கட்சிக்காரர்கள் 100 மீட்டருக்கு வெளியே தற்காலிகமாக போடப்பட்டிருந்த சாமியானா பந்தல்களில் ஆரவாரமாக காகிதங்களோடு இருந்தனர். பின்பு திருநகரில் இறங்கி என் வீட்டிற்க்கு நடந்து சென்றேன். 


எங்கள் வீட்டிலோ அனைவரும், 8 மணிக்கே ஓட்டு போட்டு விட்டு வந்தனர், என்னையும் சீக்கிரம் போக சொன்னார்கள், இல்லை என்றால் கூட்டம் வந்து விடும் என்று.


ஆனால் நானோ யாருக்கு ஓட்டு போடுவது என்பது பற்றி, எனக்கு சில குழப்பங்கள் இருந்தன, பின்பு சில எங்கள் தொகுதி வேட்பாளர்களின் நேர்காணல்கள் மற்றும் காணொளிகள் - ஐ பார்த்த பின்னர் ஒரு தெளிவு கிடைத்தது. இதற்கே 11:30 மணி ஆகிட்ரு. பிறகு, குளித்து முடித்து, சாப்பிட்டு விட்டு, 12 மணி அளவில், நான் படித்த பள்ளிக்கு சென்றேன்.

நான் பள்ளி gate- ஐ கடந்து உடன் கிருஷ்ணன் நம்பியின் “மருமகள் வாக்கு” என்ற சிறுகதையில் வருவது போன்ற அதே nostalgic தருணங்கள் எனக்கும் தோன்றியது.கேட்டை கடந்தவுடன் நேராக சென்று பின்பு கொஞ்ச தூரத்தில் வலதுபக்கம் திரும்பி ground- ஐ தாண்டி வகுப்பறைகள் இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். நானோ அவ்வாறு செல்லாமல், குறுக்கு பாதையில் மரங்களுக்கு அடியில் சென்றேன்,(அது நான் எப்போதும் சிறுவயதில் செல்லும் வழி) ஒவ்வொரு மரத்தை சுற்றியும் concrete மேடை அமைத்திருந்தார். அந்த அதே புளிய மரத்தை போய் உள்ளங்கக்கைகளால் தொட்டு பார்த்தேன். அதில் எவ்வளவோ நினைவுகள் இருக்கு, அம்மரதில் கள்விட்டு எரிந்து புளியங்காய்களை, சாப்பிட்டு இருக்கிறோம், அந்த மரத்தை ஸ்டம்ப் ஆக வைத்து, கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். பல நேரகளில் அங்கே அமர்ந்து நண்பர்களோடு பேசியிருக்கிறோம். பின்பு உள்ளே நடந்து செல்ல செல்ல பள்ளியே வேற மாதிரி இருந்தது. இருந்தாலும் மனதுக்குள்ளே ஒரு வித nostalgic feeling ஆக இருந்தது. Prayer நடக்கும் இடம், சிஸ்டர்கள்ளுக்கு பயந்து அவர்கள் முன்னாள் அரைகுறை இங்கிலீஷ் பேசுவது, வேப்பமரத்த்தடியில் மத்திய நேர சாப்பாடு சாப்பிடுவது என்றெல்லாம், எண்ணங்கள் வந்தது. 



பின்பு நான் வாக்களிக்க உள்ள பூத் உள்ள வகுப்பிற்கு சென்றேன். அது நான் இரண்டாம் வகுப்பு படித்த அதே வகுப்பு. உள்ளே சென்றேன். கூட்டமே இல்லை போன உடன், என் பூத் ஸ்லிப்பை குடுத்தேன், polling officer என் எண்ணை சத்தமாக கூறினார், பூத் ஏஜெண்டுகள் அதை குறித்து கொண்டனர். பின்பு வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்து கையெழுத்து போடும் படி இன்னொரு polling officer கூறினார். அதை முடித்த பின்னர், ஒரு ஸ்லிப்பை என்னிடம் கொடுத்தனர், அதை நான் அடுத்து உள்ள மைபோடுபவரிடம் கொடுத்தேன். அதை பெற்றுக்கொண்டு என் கையில் மைவைத்தார் “ஒரு விரல் புரட்சியே” என்ற AR Rahman வரிகள், மண்டைக்குள் ஓடியது. அடுத்தது, வாக்குபதிவு. நான் முடிவு செய்த வாக்களரை, தேடிப்பார்த்து அந்த பொத்தானை அழுத்தினேன். VVPAT இல் நான் தேர்வு செய்த நபரின் சின்னம் print ஆகி வந்து. இப்பொழுது, என் மண்டைக்குள் விஜய் சேதுபதி குரலில் "வீரன் தன் ஜனநாயக கடமையை ஆற்றினான்" என்பது போல் இருந்தது. அப்படியே நடந்து வெளியே சென்றேன்.அதே புளியமரத்தின் மரபட்டைகளை "படையப்பா" பட சிவாஜியை போல லேசாக வருடி ஒரு தட்டி குடுத்தேன். அதற்கு ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு எப்போதும் ஞாபகம் இருக்கும்!


முற்றும்.


-செந்தில் ராசன் 



Comments

Popular posts from this blog

#14 - Birth of "THE GIFT" 🎁

#20 - Dance for Universal Peace Retreat - Experience Memoir

#18 - A Retreat Experience